ஆட்டோவை திருடிய வாலிபர் கைது
தோப்புத்துறையில் ஆட்டோவை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை பகுதி நாகை சாலையில் வசிப்பர் சபீர்அகமது (வயது30). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு ஆட்டோவை தனது வீட்டின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்தார். பின்னர் அதிகாலை எழுந்து பார்க்கும் போது ஆட்டோவை காணவில்லை. இது குறித்து அவர் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் நாகை செம்போடை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்த போலீசார் கைகாட்டினர். போலீசாரை பார்த்ததும் ஆட்டோவை அங்கே நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அவரை போலீசார் விரட்டிப்படித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருக்குவளை வட்டம் பாங்கல் கிராமத்தை சேர்ந்த மணிவேல் (28) என்பதும், இவர் சபீர்அகமதுவின் ஆட்டோவை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து மணிவேலை போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இவர் இதேபோல் ஒரு முறை ஆட்டோவை திருடிது கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.