சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து

சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து

Update: 2022-02-27 16:04 GMT
காங்கேயம்,
காங்கேயம் அருகே சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
போலியோ சொட்டு மருந்து முகாம்
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்க  நாடு முழுவதும்  5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. அதன்படி காங்கேயம் அருகே சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமிற்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி  முகாமை தொடங்கி வைத்தார். பின்னர்  ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சித்தா பிரிவு கட்டிடம் என மொத்தம் ரூ.63 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்து பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் 1,154 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.  இதில் 27 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாகவும், பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் 23 குழுக்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 
 இந்த பணிகளுக்காக பல்வேறு துறைகளை சார்ந்த 4,666 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில்  1 லட்சத்து 98 ஆயிரத்து 600 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை போலியோ நோயில் இருந்து பாதுகாப்பதுடன், போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், காங்கேயம் தி.மு.க.. தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பி.பி.அப்புகுட்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எஸ்.சிதம்பரம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர்கள் ஜெகதீசன், சிவலிங்கம், பொதுப்பணித்துறை மருத்துவ பிரிவு உதவி பொறியாளர் கோவிந்தராஜ், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கேயம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பாப்பினி பச்சாபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 58 மையங்கள் அமைக்கப்பட்டு 5 வயதிற்கு உட்பட்ட 5,905 குழந்தைகளுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாகடர் முரளி தலைமலையில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்