1,313 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 1,313 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.
திண்டுக்கல்:
போலியோ சொட்டு மருந்து
இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்கும் வகையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் 1,313 இடங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த மையங்களில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இது தவிர 28 நடமாடும் சொட்டு மருந்து முகாம்கள், 51 போக்குவரத்து முகாம்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்காக மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 276 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
1 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு...
திண்டுக்கல்லில், மாநகராட்சி கமலா நேரு மருத்துவமனையில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 958 பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக 2 லட்சத்து 56 ஆயிரம் டோஸ் மருந்து இருப்பு உள்ளது. பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இதுவரை எத்தனை முறை சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், கூடுதல் தவணையாக தற்போது நடத்தப்படும் முகாம்களிலும் கலந்துகொண்டு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன், மாநகர்நல அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பழனி
இதேபோல் பழனி பஸ்நிலையம், ரோப்கார் நிலையம், அடிவாரம் உள்ளிட்ட இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. ரோப்கார் நிலையத்தில் பழனி சுகாதார துணை இயக்குனர் யசோதா தலைமையில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி, மேற்பார்வையாளர் வகாப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நெய்க்காரப்பட்டி அருகே உள்ள மண்திட்டு, பொந்துப்புளி ஆகிய இடங்களிலும் மருத்துவ பணியாளர்கள் நேரில் சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர். நத்தம், உலுப்பகுடி, செந்துறை, சிறுகுடி, கோசுகுறிச்சி, வத்திப்பட்டி ஆகிய இடங்களில் 105 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதில் பஸ்நிலையத்தில் நடந்த முகாமை நத்தம் வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் இருந்தனர்.
பெரும்பாறை, எம்.ஜி. ஆர்.நகர், கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, கட்டக்காடு, வெள்ளரிக்கரை, புல்லாவெளி, கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.