நாகையில் போலியோ சொட்டு மருந்து முகாம்
நாகையில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
வெளிப்பாளையம்:
நாகையில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
போலியோ சொட்டு மருந்து
நாகை மாவட்டம் காடம்பாடி நடுநிலைப்பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் கிராமபுறங்களில் 390 மையங்களிலும், நகர்புறங்களில் 55 மையங்களிலும் என மொத்தம் 445 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து முகாம் காலை 7 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
களப்பணியாளர்கள்
இதில் நகர்புறங்களில் 12 ஆயிரத்து 424 குழந்தைகளுக்கும், கிராமபுறங்களில் 48 ஆயிரத்து 429 குழந்தைகளுக்கும் என மொத்தம் 60 ஆயிரத்து 853 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. போலியோ சொட்டுமருந்து வழங்கும் ஒவ்வொரு மையத்திலும் 4 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் பொது சுகாதாரத்துறை தவிர உள்ளாட்சித் துறை, சமூகநலத்துறை, ஊட்டச்சத்து பணியாளர்கள், பயிற்சிசெவிலியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என ஆயிரத்து 895 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக போலியோ நோய் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடிக்க தங்களது குடும்பத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்தை தவறாமல் கொடுத்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நடமாடும் வாகனங்கள்
மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வசதி இல்லாத உட்கிராமங்களுக்கு 6 நடமாடும் வாகனங்கள் மூலம் போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெற்றன. நாகை மற்றும் வேதாரண்யம் நகராட்சி பஸ் நிலையங்களிலும், நாகை ெரயில் நிலையத்திலும் 24 மணிநேரமும் 3 நாட்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுதலங்கள், சுற்றுலாதலங்கள், நிலையங்கள், ெரயில் நிலையங்கள், தற்காலிகமாக தெரு ஓரங்களில் வசிக்கும் நாடோடிகள் என அனைத்து தரப்பு மக்களின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து வழங்கப்படுகிறது.
வீடு, வீடாக சென்று...
விடுபட்ட குழந்தைகளுக்கு இன்று(திங்கட்கிழமை) மற்றும் நாளை(செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்கள் களப்பணியாளர்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.
108 ஆம்புலன்ஸ்
முன்னதாக நாகை கலெக்டர் அலுவலகத்தில் 2 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) தலைவர் மதிவாணன் உடனிருந்தார்.