எழுத்தர், சுமை தூக்கும் தொழிலாளி பணியிடை நீக்கம்

நாகை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுத்தர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் 2 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Update: 2022-02-27 15:38 GMT
வெளிப்பாளையம்:
நாகை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுத்தர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளி  பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் 2 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
முறைகேடு
நாகை ஒன்றியம் தெத்தியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வந்தவர் செல்லையன். சுமை தூக்கும் தொழிலாளராக பணியாற்றியவர் பாரதி.
இவர்கள் 2 பேரும் விவசாயிகளை தவிர்த்து விட்டு வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்வதாகவும், ஆவணங்களில் அடித்தல், திருத்தலுடன் எழுதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் வந்தது.
பணியிடை நீக்கம்
இதை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் தெத்தி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் ரங்கநாதன் (கொள்முதல் இயக்கம்) மற்றும் தாசில்தார் ஜெயபாலன், உதவியாளர் சுப்புரெத்தினம் ஆகியோர் சென்று திடீரென ஆய்வு செய்தனர்.
இதில் செல்லையன், பாரதி ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து நுகர்பொருள் வாணிப கழக துணை மேலாளர் ரங்கநாதன் உத்தரவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் செல்லையன், பாரதி ஆகிய 2 பேர் மீது நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இதேபோல நாகை மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏற்கனவே நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்