தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஒரு லட்சத்து 25 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது;

Update: 2022-02-27 14:40 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 1¼ லட்சம் குழந்தைகளுக்கு நேற்று போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் கீதாஜீவன் முகாமை தொடங்கி வைத்தார்.
சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 34 ஆயிரத்து 199 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நடந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, தி.மு.க மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர நல அலுவலர் வித்யா, உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணை கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, குழந்தைகள் நல மருத்துவர் அருணாசலம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
1,222 மையம்
இந்தியா முழுவதும் உள்ள 5 வயதுகு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. தமிழகத்திலும் இந்த சிறப்பு முகாமை தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து உள்ளார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ (இளம்பிள்ளைவாதம்) என்ற நோயை முழுவதுமாக தடுப்பதற்காக போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் அரசு ஆஸ்பத்திரிகள், 12 வட்டார சுகாதார நிலையங்கள், 60 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 262 துணை சுகாதார நிலையங்கள், 458 அங்கன்வாடி மையங்கள், 284 தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் என மொத்தம் 1,222 மையங்களில் நடக்கிறது. இந்த பணியில் 5 ஆயிரத்து 379 பணியாளர்களை ஈடுபடுத்தி சொட்டுமருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 199 குழந்தைளுக்கு போலியோ சொட்டு மருந்து கிடைக்கப்பெற்று பயனடைவார்கள்.
சிறப்பு குழுக்கள்
மேலும் 18 சிறப்பு குழுக்கள் மற்றும் 128 நடமாடும் குழுக்கள் மூலம் தற்காலிக குடியிருப்புகள், கோவில் திருவிழாக்கள், பஸ், நிலையங்கள், இ
ரெயில் நிலையங்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம் ஆகிய இடங்களில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேற்கண்ட போலியோ சொட்டு மருந்து முகாம்களில் கொரொனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி, தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து செலுத்தி பயனடையுமாறு பொதுமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பஸ் நிலையத்தில் நடந்த போலியோ சொட்டுமருந்து முகாமை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்