ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருைக அதிகரித்தது. அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Update: 2022-02-27 13:43 GMT
ஊட்டி

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருைக அதிகரித்தது. அவர்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

வருகை அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை எழிலுக்கு பஞ்சம் இல்லை. மேலும் சுற்றுலா தலங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

இந்த நிலையில் வார விடுமுறை நாட்களான நேற்று, இன்று ஆகிய 2 நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. வார விடுமுறை நாட்களில் பொழுதை கழிக்கவும், குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும் குவிந்தனர். 

புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி

குறிப்பாக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வருகை தந்தனர். அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். 

பின்னர் பெரணி இல்லம், கண்ணாடி மாளிகைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த பெரணி செடிகள், கள்ளி செடிகளை பார்வையிட்டனர். மலர்களுடன் கூடிய செல்பி ஸ்பாட் முன்பு குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 

படகு சவாரி

இது தவிர ஊட்டியில் ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். பின்னர் மிதி படகு, துடுப்பு படகுகளில் பயணம் செய்து மகிழ்ந்தனர். கடந்த 2 நாட்களாக ஊட்டி படகு இல்லத்துக்கு 16 ஆயிரத்து 335 சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். அதாவது நேற்று 7 ஆயிரத்து 835 பேரும், இன்று 8 ஆயிரத்து 500 பேரும் வந்து இருக்கின்றனர். 

இதேபோன்று தாவரவியல் பூங்காவில் நேற்று  8 ஆயிரத்து 200 பேரும், இன்று 10 ஆயிரம் பேரும் என 18 ஆயிரத்து 200 சுற்றுலா பயணிகள் வந்து, மலர்களை கண்டு ரசித்து உள்ளனர். இதுமட்டுமின்றி ஊட்டி ரோஜா பூங்கா, படகு இல்லம், தேயிலை பூங்கா, சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்