ரூ.70 லட்சத்தில் குழந்தைகள் சிகிச்சை மையம்
குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.70 லட்சத்தில் குழந்தைகள் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
கோத்தகிரி
குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.70 லட்சத்தில் குழந்தைகள் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
அரசு ஆஸ்பத்திரி
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு லாலி ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு சிறப்பு பிரிவுகளுடன் செயல்பட்டு வரும் இந்த ஆஸ்பத்திரியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் ரூ.70 லட்சம் மதிப்பில் குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, குழந்தைகள் நல சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதிநவீன கருவிகள்
இந்த மையத்தில் கட்டில்கள், மெத்தைகள், எளிமையாக நகர்த்தக்கூடிய உணவு மேஜை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் குழந்தைகளுக்கு தேவையான நவீன பரிசோதனை, அதிநவீன சிகிச்சை கருவிகள் வரவழைக்கப்பட்டு உள்ளது.
இது மட்டுமின்றி சிகிச்சையின்போது குழந்தைகளின் மன நலனை மேம்படுத்த சுவர்களில் அழகிய வர்ணங்களில் பொம்மைகள், பறவைகள், கார்ட்டூன்கள் உள்ளிட்ட ஓவியங்களும் வரையப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை குழந்தைகளுக்கு என தனி சிகிச்சை மையம் இல்லாத நிலையில் குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டு உள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.