வளர்ப்பு யானைகள் முகாமில் இளம் நீதிபதிகள் ஆய்வு
முதுமலை புலிகள் காப்பக வளர்ப்பு யானைகள் முகாமில் இளம் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கூடலூர்
முதுமலை புலிகள் காப்பக வளர்ப்பு யானைகள் முகாமில் இளம் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இளம் நீதிபதிகள்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகளும், விலை உயர்ந்த மரங்களும் உள்ளன.
சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு குறித்து பல்வேறு துறையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழக நீதித்துறை பயிற்சி மையம் மற்றும் வனத்துறை சார்பில் வன குற்றங்கள், வன சட்டங்கள் குறித்து இளம் பயிற்சி நீதிபதிகளுக்கு முதுமலையில் 2 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
வளர்ப்பு யானைகள்
தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக மேலாண் இயக்குனர் சீனிவாசன் ரெட்டி தலைமை வகித்தார். தொடர்ந்து வன சூழல் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு, வனக்குற்றங்களை தடுப்பது குறித்து பேசினார். பின்னர் நீதித்துறை பயிற்சி மைய இயக்குனர் லிங்கேஸ்வரன், வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் நீதிபதிகளின் பங்கு என்ற தலைப்பில் விளக்கினார். தொடர்ந்து மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா, வன சட்டங்கள் குறித்து பயிற்சி அளித்தார்.
பின்னர் முதுமலை முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து இளம் நீதிபதிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கால்நடை டாக்டர்கள் குழுவினர் இளம் நீதிபதிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் வனச்சரகர் மனோஜ் குமார் உள்ளிட்ட வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
பயனுள்ளதாக இருந்தது
தொடர்ந்து இன்று 2-வது நாளாக இளம் நீதிபதிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. அப்போது வனங்களால் அனைத்து உயிரினங்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கும் வகையில் இளம் நீதிபதிகள் முதுமலை வனத்துக்குள் அழைத்து செல்லப்பட்டனர்.
தொடர்ந்து வனங்களின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. பின்னர் வன அதிகாரிகளிடம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் மிகுந்த பயனுள்ளதாக இருந்ததாக இளம் நீதிபதிகள் தெரிவித்தனர்.