ஊரக திறனாய்வு தேர்வை 1019 மாணவ மாணவிகள் எழுதினர்
வேலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 1019 மாணவ மாணவிகள் எழுதினார்கள்.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வை 1019 மாணவ மாணவிகள் எழுதினார்கள்.
ஊரக திறனாய்வு தேர்வு
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
கிராமப்புற பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதலாம். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் பிளஸ்-2 வரை ரூ.1,000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இந்தாண்டிற்கான ஊரக திறனாய்வு தேர்வு இன்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 1,060 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்கள் தேர்வு எழுத வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பொய்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, சேர்க்காடு அரசு மேல்நிலைபள்ளி, குடியாத்தம் நேஷனல் மேல்நிலைப்பள்ளி, அணைக்கட்டு வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என்று 7 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
1,019 மாணவ-மாணவிகள் எழுதினர்
ஊரக திறனாய்வு தேர்வு காலை 10 முதல் மதியம் 12 மணி வரை நடந்தது. இதையொட்டி காலை 9 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினார்கள்.
மாணவ-மாணவிகள் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கைக்கெடிகாரம், கால்குலேட்டர், ஹெட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஊரக திறனாய்வு தேர்வை 1,019 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 41 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தேர்வை கண்காணிக்கும் பணியில் தேர்வறை கண்காணிப்பாளர், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் உள்பட 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். அனைத்து மாணவர்களும் முககவசம் அணிந்து தேர்வு எழுதினார்கள்.