சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான பேட்டரி வாகன சேவை மீண்டும் இயக்கம்

சென்னை விமான நிலையத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகளுக்கான பேட்டரி வாகன சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-27 12:33 GMT
பேட்டரி வாகன சேவை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்கள் இடையே பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பேட்டரி வாகன சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக மட்டும் உள்நாட்டு முனையத்தில் இருந்து பன்னாட்டு முனையம் செல்லும் பயணிகளை ஏற்றி செல்வதற்கு ஓரிரு பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

மீண்டும் தொடங்கியது

இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் வேகம் பெருமளவு குறைந்து மாநிலம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் பெருமளவு தளர்த்தப்பட்டு உள்ளன.

இதையடுத்து கொரோனா பாதிப்பால் சென்னை விமான நிலையத்தில் 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேட்டரி வாகனங்களின் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த பேட்டரி வாகனங்களில் 24 மணி நேரமும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் இடையே வயதானவர்கள், நோயாளிகள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பயணிகளுக்கு முன்னுரிமை அளித்து அழைத்து செல்லப்படும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் இலவச சேவை. ஆனால் பேட்டரி வாகனங்களில் விமான பயணிகள் மட்டுமே ஏற்றுகின்றனர். பயணிகள் அல்லாத பார்வையாளர்கள், விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.

தரை தளத்தில் மட்டும்

இந்த பேட்டரி வாகனங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு தரை தளத்தில் உள்ள வருகை பகுதியிலும், மேல்தளத்தில் உள்ள புறப்பாடு பகுதியிலும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது விமான நிலைய விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருவதால், மேல்தளத்தில் புறப்பாடு பகுதியில் பேட்டரி வாகனங்கள் இயக்கப்படவில்லை. தரை தளத்தில் வருகை பகுதியில் மட்டுமே பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

பேட்டரி வாகனங்கள் சேவை மீண்டும் தொடங்கி இருப்பது விமான பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்