மைனர் பெண்ணை கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
வேலூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேலூர்
வேலூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுமி 5 மாத கர்ப்பம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா குருவராஜபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 22), ஆட்டோ டிரைவர். இவரும், 17 வயதான மைனர் பெண்ணும் காதலித்து வந்ததாகவும், அப்போது தினேஷ்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி அந்த பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அதையடுத்து அவர் உடனடியாக வேப்பங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் 5 மாத கர்ப்பமாக இருந்ததும், வயிற்றில் இருக்கும் சிசு இறந்து போனதும் தெரிய வந்தது.
அறுவை சிகிச்சை
அதையடுத்து அந்த பெண் மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பெண்ணின் வயிற்றில் இறந்த நிலையில் காணப்பட்ட சிசு, அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது.
இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு டாக்டர்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாஜின் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று பெண்ணிடமும் அவரது பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். அதில், சிறுமியின் கர்ப்பத்துக்கு ஆட்டோ டிரைவர் தினேஷ்குமார் காரணம் என்று தெரிய வந்தது.
போக்சோ சட்டத்தில் கைது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தினேஷ்குமாைர போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்ணுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.