மான் வேட்டையாடியவர் கைது
திருவண்ணாமலையில் மான் வேட்டையாடியவர் கைது கறி வாங்க வந்தவரும் சிக்கினார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை பகுதியில் உள்ள காப்பு காட்டில் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அடிஅண்ணாமலை காப்பு காட்டில் சிலர் மான்களை வேட்டையாடுவதாக தகவல்கள் வந்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்தபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அடிஅண்ணாமலை காப்புக் காடு பகுதியில் துப்பாக்கியால் சுட்டு 2 மான்களை வேட்டியாடிய 3 பேரை வனத்துறையின் சுற்றி வளைத்தனர். இதில் துப்பாகியுடன் 2 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவர் சிக்கினார்.
விசாரணையில் அவர் திருவண்ணாமலை கொண்டம் பகுதியை சேர்ந்த படையப்பா (வயது 23) என்பதும், தப்பியோடியவர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (26), சீனு (24) என்பதும் தெரியவந்தது.
மேலும் அந்த பகுதிக்கு மான் கறி வாங்க வந்த திருவண்ணாமலை பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த தீபராஜ் (28) என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.