புழல் அருகே அம்மா உணவக கட்டிடத்தை இடிக்க அ.தி.மு.க. எதிர்ப்பு

அ.தி.மு.க.வினர் அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-27 11:50 GMT
சென்னையை அடுத்த மாதவரம் மண்டலம் 32-வது வார்டுக்கு உட்பட்ட புத்தகரம் கடப்பா சாலை பரப்பகுளம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. நீர்நிலையை ஆக்கிரமித்து அம்மா உணவக கட்டிடம் கட்டப்பட்டு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மண்டல அலுவலர் முருகன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இரவோடு இரவாக அம்மா உணவக கட்டிடத்தை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் 50-க்கும் மேற்பட்டோர், அம்மா உணவகத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அம்மா உணவக கட்டிடத்தை இடிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

மேலும் செய்திகள்