2408 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,408 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. வேங்கிக்காலில் நடந்த முகாமை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.;
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,408 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. வேங்கிக்காலில் நடந்த முகாமை கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
போலியோ சொட்டு மருந்து முகாம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 2,048 இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. முகாம்களில் 8,055 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
முகாம்கள் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், அருணாசலேஸ்வரர் கோவில், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகில் நடந்தது. அதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 474 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கலெக்டர் பங்கேற்பு
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி துணைச் சுகாதார நிலையம் அருகே பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை இன்று கலெக்டர் முருகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
முகாமில் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) செல்வகுமார், உதவி இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சுரேஷ்குமார், உதவி திட்ட மேலாளர் விஜயரமணன், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஷ்வரி, செவிலியர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வீடு, வீடாக சென்று
இன்று சொட்டு மருந்து வழங்காத குழந்தைகளுக்காக நாளை (திங்கட்கிழமை) முதல் கிராம சுகாதாரச் செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று விடுபட்ட குழந்தைகளுக்கு வீட்டிலேயே சொட்டு மருந்து அளிக்க உள்ளனர்.
தொலைத்தூரத்தில் உள்ள எளிதில் செல்ல முடியாத இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
ஒரு குழந்தைக்கு கூட விடுபடாது, அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.