மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி பெங்களூருவை நோக்கி காங்கிரஸ் இன்று பாதயாத்திரை - டி.கே.சிவக்குமார் ஆய்வு

மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி ராமநகரில் இருந்து பெங்களூருவை நோக்கி காங்கிரஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பாதயாத்திரை நடத்துகிறது. இதுதொடர்பாக பசவனகுடி மைதானத்தில் டி.கே.சிவக்குமார் ஆய்வு நடத்தினார்.

Update: 2022-02-26 21:18 GMT
பெங்களூரு:

இன்று மீண்டும் பாதயாத்திரை

  காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா அருகே மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி காங்கிரஸ் சார்பில் பெங்களூருவை நோக்கி பாதயாத்திரை நடத்தப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் கொரோனா பரவல் காரணமாகவும், ஐகோர்ட்டு உத்தரவு காரணமாகவும் பாதயாத்திரை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

  அந்த பாதயாத்திரை மீண்டும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ராமநகர் மாவட்டம் பிடதியில் இருந்து பெங்களூருவை நோக்கி தொடங்குகிறது. காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் பாதயாத்திரையை தொடங்க உள்ளனர்.

டி.கே.சிவக்குமார் ஆய்வு

  இந்த பாதயாத்திரையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்கிறார்கள். பாதயாத்திரையில் மண்டியா மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த பாதயாத்திரை வருகிற 3-ந் தேதி பெங்களூரு பசவனகுடியை வந்தடையை உள்ளது.

  அன்றைய தினம் பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்தில் வைத்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து, பசவனகுடி மைதானத்திற்கு நேற்று காலையில் சென்று டி.கே.சிவக்குமார், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத், டி.கே.சுரேஷ் எம்.பி. ஆய்வு நடத்தினார்கள். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

குடிநீருக்கான பாதயாத்திரை

  பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி ‘நம்ம நீர், நமது உரிமை’ என்ற முழக்கத்துடன் காங்கிரஸ் பாதயாத்திரையை தொடங்கி இருந்தது. மேகதாதுவில் இருந்து ராமநகர் வரை ஏற்கனவே பாதயாத்திரை வந்திருந்தோம். எந்த இடத்தில் நிறுத்தப்பட்டதோ, அங்கிருந்து நாளை (அதாவது இன்று) மீண்டும் பாதயாத்திரை தொடங்குகிறது.

  பெங்களூருவில் 5 நாட்கள் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டோம். பட்ஜெட் தாக்கல் இருப்பதால், 3 நாட்கள் மட்டுமே பாதயாத்திரை நடக்கிறது. வருகிற 3-ந் தேதி பசவனகுடி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.
  இவ்வாறு அவர் கூறினார்.
==========


மேலும் செய்திகள்