தி.மு.க. வட்டச்செயலாளர் கொலையில் கைதான 7 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தி.மு.க. வட்டச்செயலாளர் கொலை வழக்கில் கைதான 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்
நெல்லை:
பாளையங்கோட்டை தி.மு.க. வட்டச்செயலாளர் கொலை வழக்கில் கைதான 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை
பாளையங்கோட்டை யாதவர் உச்சிமாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுதாஸ் என்ற அபே மணி. தி.மு.க. வட்டச்செயலாளர். இவர் அரசியல் காரணங்களால் கடந்த மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலை தொடர்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த தேவராஜ், ராம், பாண்டியராஜன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், கருப்பையா, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன், ஆசைமுத்து ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம்
இந்தநிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருக்கு, துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர் பாலச்சந்திரன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி ஆகியோர் பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை மாநகர போலீஸ் கமிஷனர் துரைகுமார் ஏற்று இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்பேரில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட இதற்கான உத்தரவை பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி நேற்று சிறை அதிகாரியிடம் வழங்கினார்.