தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தார்சாலை சீரமைப்பு
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் கொன்னையார் கிராமம் நல்லாம்பாளையம் முதல் அணைப்பாளையம் வரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையால் அந்த பகுதியில் தார்சாலை போடப்பட்டு வருகிறது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
-ஊர்மக்கள், கொன்னையார்.
இடிந்த சுற்றுச்சுவர் கட்டப்படுமா?
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே சித்திரப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் பள்ளியின் சுற்றுச்சுவர் ஆங்காங்கே இடிந்து விழுந்தது. இதனால் மர்ம நபர்கள் சிலர் பள்ளியின் உள்ளே புகுந்து பள்ளி வளாகத்தில் மது அருந்தி அட்டகாசம் செய்கிறார்கள். எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பாக இடிந்த சுற்றுச் சுவரை கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஊர்மக்கள், சித்திரப்பட்டி, தர்மபுரி.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்
கிருஷ்ணகிரி நகரில் சாலைகளில் ஆங்காங்கே அதிக அளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விடும் நபர்கள் மீது நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா?
-முருகன், கிருஷ்ணகிரி.
சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா?
தர்மபுரி மாவட்டத்தில் பழைய குவார்்ட்டர்ஸ், ராஜிவ் தெருவில் சாக்கடை கால்வாய் உடைந்து ஒரு ஆண்டாக திறந்த நிலையில் உள்ளது. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கொசு தொல்லையும் அதிகரித்து காணப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை சரி செய்து கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராணி, தர்மபுரி.
குப்பைகள் அள்ளப்படுமா?
சேலம் மாநகராட்சி 7-வது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் இருக்கும் பசுமை வெளி பூங்காவில் பல மாதங்களாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என இரண்டும் சுத்தம் செய்யாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குவிந்துள்ள குப்பைகளை அள்ளி, அந்த பகுதியை தூய்மையாக வைப்பார்களா?
-ஊர்மக்கள், குறிஞ்சி நகர், சேலம்.
சாலையில் ஆபத்தான குழிகள்
சேலம் அரிசிப்பாளையத்தில் இருந்து தெப்பக்குளம் செல்லும் வழியில் சாலையின் நடுவே 2 இடங்களில் ஆபத்தான குழிகள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லும்போது எதிர்பாராதவிதமாக குழியில் விழுந்து அடிபடுகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள குழியை மண் போட்டு சரி செய்வார்களா?
-ஊர்மக்கள், அரிசிப்பாளையம், சேலம்.