தானிய கடன் வசூல், மருந்து கொள்முதலில் ரூ. 34 லட்சம் முறைகேடு
பாபநாசத்தில் தானிய கடன் வசூல், மருந்து கொள்முதலில் ரூ.34 லட்சம் முறைகேடு செய்ததாக கூட்டுறவு சங்க செயலாளர், மருந்தாளுனர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாபநாசம்:-
பாபநாசத்தில் தானிய கடன் வசூல், மருந்து கொள்முதலில் ரூ.34 லட்சம் முறைகேடு செய்ததாக கூட்டுறவு சங்க செயலாளர், மருந்தாளுனர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
முறைகேடு
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வடக்கு வீதியில் பாபநாசம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கூட்டுறவு மருந்தகம் அமைந்து உஉள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் கும்பகோணம் கும்பேஸ்வரன் தெற்கு வீதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது56) என்பவர் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
கூட்டுறவு மருந்தகத்தில் தென் சருக்கை கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (35) என்பவர் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 1.4.2017 முதல் 19.8.2019 வரை மருந்து கொள்முதலில் இருப்பு குறைவு, மருந்து தொகை வழங்கியதில் முறைகேடு, தானிய கடன் வசூலில் முறைகேடு உள்பட மொத்தம் ரூ.34 லட்சத்து 41 ஆயிரத்து 761 முறைகேடு செய்து இருப்பது தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறையில் அடைப்பு
இதுகுறித்து கும்பகோணம் கூட்டுறவு துணை பதிவாளர் அட்சயபிரியா கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை வணிக குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டுக்கள் ரத்தினகுமார், நந்தகுமார், சுரேஷ் ஆகியோர் முறைகேடு வழக்குப்பதிவு செய்து கூட்டுறவு சங்க செயலாளர் ராஜேந்திரன், மருந்தாளுனர் ராஜேஸ்வரி ஆகிய 2 பேரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை மாஜிஸ்திரேட்டு சிவகுமார் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ராஜேந்திரன் கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். ராஜேஸ்வரி திருச்சி மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.