17 வயது சிறுவனின் கல்லீரலை தந்தைக்கு தானமாக வழங்க அனுமதிக்க வேண்டும்

ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு, அவரது 17 வயது மகன் கல்லீரலை தானமாக வழங்க மருத்துவக்குழு அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவக்குழுவுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-02-26 19:36 GMT
மதுரை, 
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு, அவரது 17 வயது மகன் கல்லீரலை தானமாக வழங்க மருத்துவக்குழு அனுமதிக்க வேண்டும் என்று மருத்துவக்குழுவுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கல்லீரல் பாதிப்பு
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஒரு பெண், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
 கல்லீரல் செயல்படாததால் எனது கணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாற்று கல்லீரல் பொருத்தினால் குணமாவார் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்பேரில் நான், எனது மகன்கள் மற்றும் சில உறவினர்கள் கல்லீரல் தானம் வழங்க முன்வந்தோம். டாக்டர்கள் எங்களை பரிசோதனை செய்தனர். இதில் என்னுடைய இளைய மகன் கல்லீரல், எனது கணவருக்கு பொருந்தும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
மைனர் என்பதால் சிக்கல்
அதன்பேரில் அவனது கல்லீரலில் ஒரு பகுதியை தானமாக கொடுப்பதற்கான அனைத்து சான்றிதழ்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால் என் இளைய மகனுக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை. 17 வயதுடைய மைனர் ஒருவரின் உறுப்பை தானமாக பெற இயலாது என்கின்றனர்.
எனது கணவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளார். எனவே எனது இளைய மகன் கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க அனுமதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அனுமதி வழங்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் நிரஞ்சன் குமார் ஆஜராகி, உறுப்பு மாற்றுவதற்கான அங்கீகாரக்குழு 2 மாதத்திற்கு ஒருமுறைதான் கூடி, முடிவு செய்யும். மனுதாரரின் கணவர் உடனடியாக உறுப்பு மாற்று ஆபரேசன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனவே அந்த குழு உடனடியாக கூடி, மனுதாரரின் இளைய மகனின் கல்லீரலில் ஒருபகுதியை தானமாக பெறுவதற்கு அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், மனுதாரரின் கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். எனவே அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சையை அளிக்க வசதியாக உறுப்பு மாற்று சிகிச்சை மருத்துவ அங்கீகாரக்குழு உடனடியாக கூடி, அவரது இளைய மகனின் கல்லீரலில் ஒருபகுதியை அவரது தந்தைக்கு தானமாக அளிக்க தேவையான அனுமதியை வழங்க வேண்டும், என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்