திருமண மண்டப உரிமையாளரை தாக்கி நகை பறிப்பு
விருதுநகரில் திருமண மண்டப உரிமையாளரை தாக்கி நகையை பறித்து சென்றனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே பெத்தனாட்சி நகரில் திருமண மண்டபம் உள்ளது. திருமண மண்டபத்திற்கு எதிரே அந்த மண்டபத்தின் உரிமையாளர் பிர்லா சேகரன் (வயது 76) குடியிருந்து வருகிறார். நேற்று காலை அவரை சந்தித்த ஒரு நபர் புனித நீராட்டு விழா நடத்துவதற்காக திருமண மண்டபம் வாடகைக்கு வேண்டுமென்று பிர்லாசேகரனிடம் கேட்டுள்ளார். மேலும் மண்டபத்தை திறந்து காட்டும்படியும் அவர் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பிர்லாசேகரன் மண்டபத்தை திறந்து அவரிடம் காட்டினார். பின்னர் மாடியை பார்க்க வேண்டும் என்று அந்தநபர் கூறியவுடன் அவரை மாடிக்கு அழைத்துச் சென்று பிர்லாசேகரன் மாடியை காட்டியுள்ளார். அப்போது அந்த நபர் திடீரென பிர்லா சேகரனின் தலையில் தாக்கி விட்டு அவர் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி விட்டார். இதுபற்றி பிர்லா சேகரன் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசார் விசாரணையில் திருமண மண்டபத்தில் காவலாளி நியமிக்கப்படவில்லை என்றும் மண்டபத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை என்றும் தெரியவந்தது.