கடன் வாங்கி தருவதாக முகநூலில் ஏமாற்றி ரூ.76 ஆயிரத்தை வாலிபரிடம் பறித்த கும்பல்

கடன் வாங்கி தருவதாக முகநூலில் ஏமாற்றி ரூ.76 ஆயிரத்தை வாலிபரிடம் பறித்த கும்பல் குறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-26 18:37 GMT
ராமநாதபுரம்
கடன் வாங்கி தருவதாக முகநூலில் ஏமாற்றி ரூ.76 ஆயிரத்தை வாலிபரிடம் பறித்த கும்பல் குறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடன் தருவதாக...
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் காயிதேமில்லத் தெருவை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (வயது 38). இவர் தனது செல்போனில் முகநூல் பக்கத்தில் பார்த்து கொண்டிருந்தாராம். அப்போது ஒரு நிறுவனத்தின் பெயரில் கடன் தருவதாக வந்த தகவலை பார்த்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் சாகுல்ஹமீதுவின் விவரங்களை பெற்றுக்கொண்டு கடன் பெற தகுதியாக உள்ளீர்கள் ரூ.2 லட்சம் வரை கடன் தரலாம் என்று கூறியுள்ளார்.தொழில் மேம்பாட்டிற்காக அந்த கடன் தொகையை பெற்றுவிட வேண்டும் என்று சாகுல்ஹமீது விரும்பி உள்ளார். 
இதன்படி அவர்கள் கேட்டுக்கொண்டபடி பல்வேறு தவணைகளில் கடன் அனுமதி வழங்குவதற்காக ஜி.எஸ்.டி. வரி, தடையில்லா சான்று, நடைமுறை கட்டணம், செயல்முறை கட்டணம் என பல்வேறு கட்டணங்களை கூறி ரூ.76 ஆயிரத்து 448 வரை ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி உள்ளார். இந்தளவு பணத்தினை பெற்ற பின்னரும் கடன் தராமல் மேலும், ரூ.49 ஆயிரத்து 590 கேட்டுள்ளனர். நாம் கேட்கும் கடன் தொகையே ரூ.2 லட்சம் தான் ஆனால் இவர்கள் நம்மிடம் இருந்து இதுவரை ரூ.76 ஆயிரம் பெற்றுள்ளனர். இதற்கு மேலும் ரூ.49 ஆயிரம் கேட்கின்றனர் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது அது போலி நிறுவனம் என்பது தெரிந்தது. 
விசாரணை
இதுகுறித்து சாகுல்ஹமீது ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் வழக்குபதிவு செய்து கடன் தருவதாக கூறி முகநூலில் ஏமாற்றிய நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றார்.

மேலும் செய்திகள்