ஊராட்சி தலைவர் மகன் மீது தாக்குதல் செயலாளர் உள்பட 2 பேர் கைது

தானிப்பாடி அருகே ஊராட்சி மன்ற தலைவரின் மகனை தாக்கிய வழக்கில் ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-02-26 18:22 GMT
தண்டராம்பட்டு

தானிப்பாடி அருகே ஊராட்சி மன்ற தலைவரின் மகனை தாக்கிய வழக்கில் ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாக்குதல்

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே உள்ள வேப்பூர் செக்கடி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அம்மாக்கண்ணு. 

இவரது மகன் சஞ்சீவிகாந்தி (வயது 40). இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அங்குள்ள மேடு பள்ளமான ரோடுகளில் மண் கொட்டி சாலையை சீரமைத்துள்ளார்.

அதற்காக தொழிலாளர்களுடன் பணியில் ஈடுபட்டு வந்தபோது அங்கு வந்த ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன் (48), மற்றும் அவரது சித்தப்பா வேடிச்சி (51) மற்றும் உறவினர்களான சர்குணம், ஸ்ரீதர் ஆகியோர் நிலத்தின் வழியாக டிராக்டரை ஏன் ஓட்டினீர்கள் என்று கேட்டு சஞ்சீவிகாந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் அவரது தரப்பினர் சஞ்சீவிகாந்தியை கட்டையாலும் கையாளும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் படுகாயமடைந்த சஞ்சீவி காந்தி சிகிச்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

2 பேர் கைது

இதுகுறித்து சஞ்சீவிகாந்தி கொடுத்த புகாரின் பேரில் தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன் அவரது சித்தப்பா வேடிச்சி ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

ஸ்ரீதர், சர்குணம் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்