திருவாரூர் மாணவன்- மாணவியை மீட்க வேண்டும்
உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வரும் திருவாரூர் மாவட்ட மாணவர்- மாணவியை மீட்டுத்தர வேண்டும் என பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருவாரூர்;
உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வரும் திருவாரூர் மாவட்ட மாணவர்- மாணவியை மீட்டுத்தர வேண்டும் என பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மாணவர்கள் தவிப்பு
ரஷியா- உக்ரைன் இடையே போர் மூண்டு உள்ளதால் உக்ரைனில் மருத்துவம் படிக்்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் உக்ரைனில் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகிறார்கள். எனவே உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என அவர்களின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் காரைக்காட்டு தெருவை சேர்ந்த நைனார்முகமது. இவருடைய மகன் ஜெயினுல் ஆரிப் மற்றும் குடவாசல் விஷ்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் மகள் அபிராமி ஆகியோர் உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகிறாார்கள். உக்ரைனில் தற்போது போர் மூண்டு உள்ளதால் இவர்கள் இருவரும் தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அவர்களை பத்திரமாக மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று மாணவர் மற்றும் மாணவியின் பற்றோர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மீட்டுத்தர வேண்டும்
இது குறித்து நைனார் முகமது கூறியதாவது
எனது மகன் ஜெயினுல்ஆரிப் உக்ரைனில் உள்ள கார்கிவ் நேஷனல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதல் ஆண்டு படித்து வருகிறார். தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில் எனது மகன் பதுங்கு குழியில் தஞ்சமடைந்து உள்ளதாகவும், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு சிரமப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அவன் தங்கியிருக்கும் இடத்தின் அருகில் ரஷிய படையினர் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது மகனை பத்திரமாக மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைப்போல மாணவி அபிராமியின் தந்தை வைத்தியநாதன் கூறுகையில், எனது மகள் அபிராமி உக்ரைனில் பாதுகாப்பு கருதி பதுங்குகுழியில் தஞ்சமடைந்து உணவு மற்றும் பிற தேவைகளுக்காக சிரமப்படுகிறாள். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும் என கூறினார்.