பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிதியுதவி

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சத்தை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

Update: 2022-02-26 17:06 GMT
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 24-ந் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் தொட்டம்பட்டியை சேர்ந்த ஜெயராஜ், ஈராட்சியை சேர்ந்த ராமர், குமாரபுரத்தை சேர்ந்த தங்கவேல், நாலாட்டின்புத்தூர் வி.பி.சிந்தன்நகரை சேர்ந்த மாடமுத்து என்ற கண்ணன் ஆகியோர் பலியானார்கள்.

இந்த நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்து இருந்தார். 

இதையடுத்து தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர், வெடி விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்களின் வீட்டுக்கும் நேற்று நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, முதல்-அமைச்சர் அறிவித்த தலா ரூ.3 லட்சம் நிவாரணத்தொகைக்கான காசோலையை வழங்கினர். 

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், தாசில்தார்கள் அமுதா, ராஜ்குமார், பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், ராதா கிருஷ்ணன், வக்கீல் அணி அழகர்சாமி, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சந்தனம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்