நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு; 7 பேர் பணியிடை நீக்கம்
நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 லட்சத்து 5 ஆயிரம் மெட்ரிக் டன்
நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் நெல் கொள்முதல் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக மாவட்டத்தில் 156 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1 லட்சத்து 5 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 70 ஆயிரம் மெட்ரிக் டன் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 17 ஆயிரம் மெட்ரிக் டன் வெளி மாவட்டங்களுக்கு ெரயில்வே வேகன்கள் மூலம் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முறைகேடு புகார்
வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதிக்குள் நெல் கொள்முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தீவிரமாக நெல் கொள்முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தது.
இந்த முறைகேடுகளை தடுக்க 6 உதவி கலெக்டர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
7 பேர் பணியிடை நீக்கம்
இந்த நிலையில், ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யாமல் நேரடியாக நெல் வாங்கியது, நிர்ணயம் செய்த எடையை விட கூடுதல் எடை அளவு அதிகமாக இருந்தது. விவசாயிகளிடம் இருந்து பணம் பெற முயற்சி செய்தது ஆகிய புகார்கள் அடிப்படையில் ஒரு உதவியாளர், 6 பட்டியல் எழுத்தர் என 7 பேரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நாகை மண்டல முதுநிலை மண்டல மேலாளர் பாண்டியன் உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த 7 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் முறைகேடுகளில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
----