தொழிலாளியை தாக்கியவரை கைது செய்யக்கோரி பெரும்பாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
பெரும்பாலையில் தொழிலாளியை தாக்கியவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏரியூர்:
பெரும்பாலையில் தொழிலாளியை தாக்கியவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தையல் தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் மகாதேவன் (வயது28). தையல் தொழிலாளி. இவரை காவாக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் (31) கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் பெரும்பாலை போலீசில் புகார் அளித்தார். ஆனால் 3 நாட்கள் ஆகியும் சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.
இந்தநிலையில் தாக்குதல் நடத்திய சுரேசை கைது செய்யக்கோரி, மகாதேவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று ெபரும்பாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
மகாதேவனை தாக்கிய சுரேசை கைது செய்யும் வரை சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், பழனிச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பென்னாகரம்-மேச்சேரி சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.