பாலக்கோடு அருகே என்ஜின் பழுதால் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது
பாலக்கோடு அருகே என்ஜின் பழுது காரணமாக நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு 2 மணி நேரம் காலதாமதமாக பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.
தர்மபுரி:
பாலக்கோடு அருகே என்ஜின் பழுது காரணமாக நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு 2 மணி நேரம் காலதாமதமாக பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.
என்ஜின் பழுது
நாகர்கோவில்- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை தர்மபுரி வழியாக பெங்களூரு நோக்கி சென்றது. இந்த ரெயில் பாலக்கோடு அருகே கோவிலூர் கொட்டாய் பகுதியில் காலை 6.30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து பெங்களூரு ரெயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூருவில் இருந்து மாற்று ரெயில் என்ஜின் பாலக்கோடு அருகே ரெயில் நின்ற பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அந்த ரெயிலில் மாற்று என்ஜினை பொருத்தும் பணி நடந்தது.
2 மணி நேரம் தாமதம்
இதைதொடர்ந்து காலை 8.30 மணிக்கு அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. என்ஜின் பழுது காரணமாக சுமார் 2 மணி நேரம் ஏற்பட்ட கால தாமதத்தால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் பழுது காரணமாக சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் தர்மபுரி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. காலை 9 மணிக்கு மேல் இந்த ரெயில் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது.