மாரண்டஅள்ளி அருகே விவசாயி வெட்டிக்கொலை மகன் உள்பட 4 பேர் கைது
மாரண்டஅள்ளி அருகே விவசாயியை வெட்டிக்கொலை செய்த மகன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு:
மாரண்டஅள்ளி அருகே விவசாயியை வெட்டிக்கொலை செய்த மகன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விவசாயி கொலை
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள எருதுகூடஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது75). விவசாயி இவருக்கு, 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். இவர் தனது மனைவி இறந்து விட்டதால் மகள் நாகம்ம்மாள் வீட்டில் வசித்து வந்தார். முனியப்பனுக்கும், அவரது மகன் மாதுவுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் முதியவர் தனது 1 ஏக்கர் நிலத்தை விற்க விலை பேசி முன் பணமாக ரூ.1 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாது, தனது தந்தை முனியப்பனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிசென்றார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
4 பேர் கைது
அப்போது சொத்து தகராறில் மாது அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் மாரியப்பன் (33), பெருமாள் (42), மாதையன் (42) ஆகியோருடன் சேர்ந்து முதியவரை அபிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இதனிடையே அவர்கள் 4 பேரும் மாரண்டஅள்ளி அருகே உள்ள பொப்பிடி பஸ் நிறுத்தத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மாது உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர்.