2ந் தேதி உறுப்பினர்கள் பதவி ஏற்பு கிருஷ்ணகிரி நகராட்சி கூட்ட அரங்கு தயார் செய்யும் பணி தீவிரம்
வருகிற 2ந் தேதி உறுப்பினர்கள் பதவி ஏற்க இருப்பதால் கிருஷ்ணகிரி நகராட்சி கூட்ட அரங்கு தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி:
வருகிற 2-ந் தேதி உறுப்பினர்கள் பதவி ஏற்க இருப்பதால் கிருஷ்ணகிரி நகராட்சி கூட்ட அரங்கு தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
2-ந் தேதி பதவி ஏற்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி முடிவடைந்ததுடன் வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதி நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில், தி.மு.க. 22 வார்டுகளையும், அ.தி.மு.க. 5 வார்டுகளையும், காங்கிரஸ் ஒரு வார்டையும், பா.ஜனதா ஒரு வார்டையும், சுயேச்சைகள் 4 வார்டுகளையும் கைப்பற்றினர்.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் வருகிற 2-ந் தேதி பதவியேற்க உள்ளனர். இதற்காக நகர்மன்ற கூட்ட அரங்கை சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து நகராட்சி ஆணையர் முருகேசன் கூறியதாவது:-
தயார் செய்யும் பணி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு 6 வருடங்களாக நகர்மன்ற கூட்டம் நடைபெறவில்லை. பெரும்பாலும் கூட்ட அரங்கம் அறை பூட்டியே இருந்தது. எப்போதாவது அலுவலக கூட்டத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு கிருஷ்ணகிரி நகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் வருகிற 2-ந் தேதி கவுன்சிலர்களாக பதவியேற்க உள்ளனர்.
இந்தநிலையில் நகர்மன்ற கூட்ட அரங்கம் சுத்தம் செய்யப்பட்டு 33 கவுன்சிலர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமரும் வகையில் இருக்கைகள் சரி செய்யப்பட்டன. ஜன்னல் மற்றும் மின்சாதன பொருட்கள் சரி செய்யப்பட்டன. இனி வரும் நாட்களில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.