சமூக வலைத்தளங்களில் வைரலான திருடனின் வாக்குமூலம்; பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
திருடனின் வாக்குமூலம் சமூக வலைத்தளங்களில் வைரலான சம்பவத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென்மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
தேனி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ரெங்கசாமிபட்டியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 31). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து திருட முயன்றார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் அவரை பிடித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குமூலத்தை போலீசார் வீடியோ எடுத்தனர். பின்னர் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசாரிடம், ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குமூலம் வீடியோ வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்திய விதமும், வீடியோவில் இடையே வரும் போலீஸ் அதிகாரியின் உரையாடலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நோட்டீஸ் அனுப்பினார். இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையாக, இன்ஸ்பெக்டர் மதனகலாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு உத்தரவிட்டார்.
இதையடுத்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் மதனகலா விடுவிக்கப்பட்டார். பின்னர், அவர் மதுரையில் உள்ள தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.