ரெயில்வே சுரங்கப்பாதையை சூழ்ந்த தண்ணீர்
திண்டுக்கல்லில், ரெயில்வே சுரங்கப்பாதையை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடை, டிக்கெட் கவுண்ட்டருக்கு அருகே உள்ளது. இதனால் பயணிகள் எளிதாக சென்று வருகின்றனர். 2,3,4-வது நடைமேடைகளுக்கு செல்வதற்கு, ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
மேலும் 2, 3-வது நடைமேடைகளுக்கு பயணிகள் எளிதாக செல்லும் வகையில் டிக்கெட் கவுண்ட்டருக்கு அருகில் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது மூடப்பட்டு இருந்த இந்த சுரங்கப்பாதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதன் பின்னர் பயணிகள் சுரங்கப்பாதையை பயன்படுத்த தொடங்கினர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சுரங்கப்பாதையில் திடீரென தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது. சுமார் ¾ அடி உயரத்துக்கு சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் சுரங்கப்பாதையை பயணிகள் பயன்படுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்தி, சுரங்கப்பாதையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.