‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வீணாக செல்லும் குடிநீர்
பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. அதன் அருகில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிதண்ணீர் கசிந்து வீணாக செல்கிறது. எனவே, குடிநீர் வீணாக செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணன், கே.டி.சி.நகர்.
மருத்துவ வசதி
நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா கரைசுத்துபுதூர் பஞ்சாயத்து தோப்புவிளை, சூடுஉயர்ந்தான்விளை, கல்விளை, புலிமான்குளம், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு அருகே நவ்வலடியில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக நவ்வலடிக்கு சென்றால், இங்கிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உவரி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அலைகழிக்கப்படுகின்றனர். எனவே, உவரி அரசு மருத்துவமனையை, நவ்வலடி அரசு மருத்துவமனையுடன் இணைத்தால் மேற்கண்ட கிராம மக்கள் பெரிதும் பயன் அடைவார்கள். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மேற்கண்ட கிராம மக்கள் மருத்துவ வசதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
அ.பிச்சை, தோப்புவிளை.
போக்குவரத்து நெரிசல்
பாளையங்கோட்டை மகாராஜநகர் ரவுண்டானா பஸ் நிலையத்தில் காலை நேரத்தில் பள்ளிக்கூடம், அலுவலகம் செல்வோர் கூட்டம் அதிகமாக இருக்கும். இதேபோல் மாலையிலும் கூட்டம் மிகுந்து காணப்படும். அப்போது பஸ்களும் அதிகளவில் வந்து செல்லும். அந்த நேரங்களில் பெரும்பான்மையான தனியார் பஸ்கள் ஒன்றையொன்று முந்திச் செல்லவும், முதலில் புறப்படுவதற்கும் போட்டி போடுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கூடம் மற்றும் அலுவலகத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வேண்டுகிறேன்.
அருண் விக்னேஷ், மகாராஜநகர்.
நூலக கட்டிடம் புதுப்பிக்கப்படுமா?
திசையன்விளை காமராஜர் சிலை அருகே பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. அதில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் வெளித்தோற்றம் வாசகர்கள் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. ஆகவே, கட்டிடத்துக்கு வர்ணம் பூசி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.
புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுமா?
தென்காசி மாவட்டம் கருத்தபிள்ளையூர் என்ற ஊரில் இருந்து சிவசைலம், கல்யாணிபுரம், சம்பன்குளம், அழகப்பபுரம், கோவிந்தபேரி, கடையம் வழியாக தென்காசிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும். இதனால் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தென்காசி மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும். எனவே, புதிய வழித்தடத்தில் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.கிறிஸ்டோபர், கருத்தபிள்ளையூர்.
சுகாதாரக்கேடு
கடையம் பஸ்நிலையம் அருகே உள்ள கட்டண கழிப்பிடத்தில் கழிவுநீர் தொட்டி நிறைந்து தெருவில் செல்லும் வாறுகாலில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
ஆர்.கணேசன், கடையம்.
வேகத்தடைகளால் அவதி
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் கோவில்பட்டி அமைந்துள்ளது. ஆனால், அந்த வழித்தடத்தில் 36 வேகத்தடைகள் உள்ளன. சுற்றிலும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையே பெரிய மருத்துவமனை ஆகும். விபத்து, பிரசவம் போன்ற அவசர காலங்களில் இவ்வளவு வேகத்தடைகளை கடந்து அவசர ஊர்தி உள்ளிட்ட மற்ற வாகனங்கள் செல்வதற்கு மிகவும் தாமதம் ஆகின்றன. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்படுவதுடன், சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம். எனவே, அவசியமான இடங்களை தவிர மற்ற இடங்களில் உள்ள அதிகப்படியான வேகத்தடைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், கழுகுமலை.
ஊர் பெயர் பலகை
திருச்செந்தூரில் இருந்து நங்கைமொழி வரை சுமார் 2 வருடங்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டு, மாநில நெடுஞ்சாலை ஆனது. ஆனால் இதுவரை இடைப்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு ஊர் பெயர் பலகையோ, வேகத்தடை எச்சரிக்கை பலகையோ வைக்கப்படவில்லை. எனவே, ஊர் பெயர் பலகை, வேகத்தடை எச்சரிக்கை பலகை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
திருமணி, திருராமநல்லூர்.