வாகனம் மோதி கர்ப்பிணி-தாய் உள்பட 3 பேர் பலி
ஓட்டப்பிடாரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற கர்ப்பிணி, தாய் உள்பட 3 பேர் பலியானார்கள்.
ஓட்டப்பிடாரம்:
தூத்துக்குடி தாளமுத்துநகர் குமரன்நகரைச் சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி மாரியம்மாள் என்ற முத்துக்கனி (வயது 48). இவர்களுக்கு காளீஸ்வரி, கன்னிச்செல்வி (21) ஆகிய மகள்கள்.
கணவன்-மனைவி தகராறு
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கன்னிச்செல்விக்கும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நெசவாளர் காலனியைச் சேர்ந்த டிரைவரான ராஜேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
பின்னர் கன்னிச்செல்வி தனது கணவருடன் காரைக்குடியில் வசித்து வந்தார். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடைேய மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதை பேசி முடிப்பதற்காக மாரியம்மாள், தனது மருமகனான காளீஸ்வரியின் கணவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் பூல்பாண்டியாபுரத்தை சேர்ந்த மகாராஜா மகன் மணிகண்டராஜாவுடன் (24) ஒரு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியில் இருந்து காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், அவர்கள் சென்றும், கணவன்-மனைவி இடையேயான பிரச்சினையை பேசி முடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் மாரியம்மாள், மணிகண்டராஜா ஆகியோர் கன்னிச்செல்வியை அழைத்துக்கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.
தாய்-மகள் பலி
நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் ஓட்டப்பிடாரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம்-எப்ேபாதும் வென்றான் இடையே 3-வது கண்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டு இருந்தது.
அந்த சமயத்தில் பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதிவிட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியம்மாள், கன்னிச்செல்வி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மணிகண்டராஜா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
மருமகனும் சாவு
இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் எப்போதும் வென்றான் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகம்மது, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த மணிகண்டராஜாவை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
பலியான மாரியம்மாள், கன்னிச்செல்வி ஆகியோர் உடல்களை போலீசார் மீட்டு அதே ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
3 மாத கர்ப்பிணி
மேலும், சம்பவ இடத்தை விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து எப்போம் வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான கன்னிச்செல்வி 3 மாதம் கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டப்பிடாரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற கர்ப்பிணி, தாய் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.