மூதாட்டி கொலை வழக்கில் மகன் கைது

விளாத்திகுளம் அருகே மூதாட்டியை அடித்துக் கொன்ற வழக்கில் மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-02-26 14:08 GMT
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கன்னிமார்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி மனைவி மூக்கம்மாள் (வயது 75). மாடசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் மூக்கம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் கணேசன் (49) கோவில்பட்டி அருகே உள்ள மேலபட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் அவ்வப்போது கன்னிமார்கூட்டத்துக்கு வந்து தனது தாயை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி காலை கணேசன் கன்னிமார்கூட்டத்துக்கு வந்தார். அவர் தனது தாய் மூக்கம்மாளிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். ஆனால் மூக்கம்மாள் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன், மூக்கம்மாளை கீழே தள்ளிவிட்டு கம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் கணேசன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூரங்குடி போலீசார் மூக்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கணேசனை தேடி வந்தனர்.  இந்த நிலையில் கணேசன் மதுரையில் பதுங்கியிருப்பதாக சூரங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று, கணேசனை கைது செய்து பேராவூரணி சிறையில் அடைத்தனர்.



மேலும் செய்திகள்