திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கண்டிகையில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் மற்றும் மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி. ராஜா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் சட்டமன்ற செயலாளர் மற்றும் மதிப்பீட்டு குழு செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலாளர் பாலசுப்பிரமணியன், துணை செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த குழுவினர் ஈக்காடு கண்டிகை அரசு தோட்டக்கலை பண்ணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் விவசாயிகளுக்கு இலவசமாக விதைகளை வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஆய்வு நடத்தினார்கள்.
திருவலங்காட்டில் அமைந்துள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வுகூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுகூட்டத்தில் ஆலையின் தரம் உயர்த்துவது குறித்தும், விவசாயிகளின் நலன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
கோரிக்கை
இந்த கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் மேலாண்மை இயக்குனர் மலர்விழி கூறுகையில்:-
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1984-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ஆலையின் அரவை திறன் சரியில்லாததால் வெளிமாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கும், தனியார் ஆலைகளுக்கும் விவசாயிகள் கரும்பு ஏற்றுமதி செய்கின்றனர்.
இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் கரும்பு பயிரிடும் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். எனவே தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் இதனை முதல்- அமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் கரும்பு விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரத்தை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கரும்பு வெட்டு கூலியை முறைப்படுத்தவேண்டும் என்றும், பழைய எஸ்.எ.பி முறையை கொண்டு வரவேண்டும், மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலியாக உள்ள 390 பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி. ராஜா பேசியதாவது:- மாநில திட்டக்குழுவில் சர்க்கரை ஆலையை நவீன படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். மேலும் ஆலை அரவை திறன் சரியில்லாததால் 15 சதவீத நஷ்டத்தில் இயங்குகிறது. இதனால் ரூ.57 கோடி மதிப்பில் புது எந்திரம் வாங்கப்பட உள்ளது, காலிபணியிடங்களை நிரப்புவது குறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.