பெரம்பூரில் பஸ்சை வழிமறித்து கேக் வெட்டி கொண்டாடிய பள்ளி மாணவர்கள்
சென்னை அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெரம்பூரில் பஸ்சை வழிமறித்து அதன் மீது ஏறி மாலை அணிவித்து கேக் வெட்டி பஸ் தினம் கொண்டாடினர்.
பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் உள்ள சென்னை அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று மாலை பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலை லட்சுமி அம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த வழியாக பிராட்வேயில் இருந்து கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் வரை செல்லும் தடம் எண்-64 கொண்ட பஸ்சை வழிமறித்து அதன் மீது ஏறி மாலை அணிவித்து கேக் வெட்டி பஸ் தினம் கொண்டாடினர். அப்போது இதைக்கண்டு மாணவர்களை தட்டிக் கேட்ட கண்டக்டர் வேலு மீது கேக்கை வீசி எறிந்து மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடினர்.
இது குறித்து கண்டக்டர் வேலு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் செம்பியம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.