மருத்துவ படிப்புக்காக உக்ரைன் சென்ற தமிழக மாணவர்கள் 3 பேர் வீடு திரும்பினர்

மருத்துவ படிப்புக்காக உக்ரைன் சென்ற தமிழக மாணவர்கள் 3 பேர் வீடு திரும்பினர். குண்டு மழையை நேரில் பார்த்ததாக அங்கிருந்து வந்தவர் பேட்டி அளித்துள்ளார்

Update: 2022-02-25 23:57 GMT
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவநேசன். இவரது மனைவி அமுல். இவர்களுக்கு சந்துரு, ரஞ்சித் என 2 மகன்கள் உள்ளனர்.

சந்துரு உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் போர் மூண்டதையடுத்து, சந்துருவின் பெற்றோர் தனது மகனின் வங்கி கணக்கில் ரூ.35 ஆயிரம் செலுத்தி உடனே கிளம்பி வரும்படி அன்பு கட்டளையிட்டனர். இதனையடுத்து சந்துரு மற்றும் இவரது நண்பர்களான செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கத்தை சேர்ந்த புவனேஷ்வரன் (22) மற்றும், ஹரிஹரன் (22) ஆகியோர் இன்று (சனிக்கிழமை) விமானம் ஏறி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வீட்டுக்கு வந்து சேருவது போல விமான டிக்கெட் எடுத்துள்ளனர்.

இதற்கிடையில் அங்கு போர் உச்சம் தொடவே உஷாரான சந்துரு உள்ளிட்ட 3 மாணவர்களும் இந்த மாதம் 23-ந் தேதியன்று டிக்கெட் எடுத்து துபாய் வந்துள்ளனர். ஆனால் அங்கு விமானம் இல்லாததால் அங்கு ஒரு பகல், ஒரு இரவு என விமான நிலையத்திலேயே தங்கி நேற்று முன்தினம் கிளம்பி நேற்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

குண்டு மழை

இது குறித்து சந்துரு கூறியதாவது:-

உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறேன். உக்ரைனில் போர் உச்சத்தில் இருப்பதால் அவசர அவசரமாக வந்துவிட்டோம். அனைத்து பொருட்களின் விலையும் 5 மடங்கு அதிகரித்து விட்டது. ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றால் கூட நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் குண்டுமழை பொழிவதை பார்த்து பதறிவிட்டோம்.

தப்பித்தால் போதும் என்ற மனநிலையில் தான் நாங்கள் முன் கூட்டியே வந்தோம். சாதாரணமாக விமான டிக்கெட் ரூ. 27 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை தான் ஆகும் ஆனால் தற்போது நாங்கள் ரூ. 75 ஆயிரம் செலவு செய்து தமிழகம்் திரும்பியுள்ளோம். மேலும் எங்களுடன் படித்து வந்த 500-க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் பதுங்கு குழிகள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெற்றோர் வேண்டுகோள்

ஆவடி சரஸ்வதி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சுடர்மணி. இவரது மனைவி கிரிஜா. இவர்களுக்கு சரண் பிரகாஷ் என்ற மகனும், லோகபிரியா என்ற மகளும் உள்ளனர். சரண் பிரகாஷ் உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்றார் இந்நிலையில் தற்போது ரஷியா-உக்ரைன் இடையே போர் திவிரமடைந்துள்ள நிலையில் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உக்ரைன் நாட்டில் சரண் பிரகாஷ் சிக்கி தவித்து வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து ஆவடியில் வசிக்கும் அவரது பெற்றோர் கூறும்போது:- எனது மகன் உட்பட அந்தக் கல்லூரியில் படிக்கும் தமிழக மாணவர்கள் 400 பேர் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல முடியாமல் உக்ரைனில் தவித்து வருகின்றனர். எனவே எனது மகன் உட்பட தமிழக மாணவர்களை மீட்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரண் பிரகாஷ் பெற்றோர் கூறினர்.

மேலும் செய்திகள்