உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தென்காசி மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக மீட்க பெற்றோர்கள் கோரிக்கை
உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கடையநல்லூர்:
ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைன் மீது தாக்குதல்
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நேற்று முன்தினம் போர் தொடுத்தது. அந்த நாட்டின் மீது சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதனால் உக்ரைனில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அந்த நாட்டிற்கு கல்வி பயில வெளிநாட்டு மாணவ, மாணவிகள் சென்றுள்ளனர். இதேபோல் தமிழ்நாட்டைச்சேர்ந்த மாணவ, மாணவிகளும் அங்கு உள்ளனர். அங்கிருந்து மாணவ, மாணவிகள் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் சிக்கி உள்ளனர்.
தென்காசி மாணவர்கள்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் உள்ளிட்டோரை மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உக்ரைனில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
கடையநல்லூர் பேட்டை காதர் முகையதீன் குத்பா பள்ளிவாசல் தெருவில் குடியிருக்கும் ஹமீது பாதுஷா என்பவரது மகன் சாகுல்ஹமீது மேற்கு உக்ரைனில் தேசிய மருத்துவக்கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அங்கு நடந்து வரும் போர் காரணமாக வெளியேற முடியாமல் சிக்கி உள்ளார். தான் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகிலேயே குண்டு மழை பொழிவதை வீடியோவாக பதிவு செய்து கடையநல்லூரில் உள்ள பெற்றோருக்கு அனுப்பி வருகிறார்.
10-க்கும் மேற்பட்டவர்கள்
மேலும், அதே பகுதி ரைஸ்மில் தெருவைச் சேர்ந்த சேக்உதுமான் மகன் அனஸ். இவர் இறுதி ஆண்டு மாணவர் ஆவார். நத்கர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த செரீப் மகன் ஆசாத். புளியங்குடி வலையர் 6-வது தெருவில் குடியிருக்கும் கோதரி மகன் அப்துல்லா ஆகியோரும் அங்கு உள்ளனர்.
இதுபோன்று கடையநல்லூரைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அங்கே சிக்கித்தவிப்பதாக தெரிகிறது.
பெற்றோர்கள் கோரிக்கை
தற்போது மெட்ரோ சுரங்கப்பாதையில் தங்க வைத்து இருப்பதாக வாட்ஸ்-அப் மற்றும் வீடியோ கால் மூலம் பெற்றோர்களுக்கு மாணவர்கள் தகவல் அனுப்பி வருகின்றனர்.
இந்த மாணவர்கள் தற்போது சொந்த ஊருக்கு திரும்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய-மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு தங்கள் மகன், மகள்களை பாதுகாப்பாக மீட்டு ஊர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.