தென்காசி அருகே ஒற்றை தந்த காட்டுயானை அட்டகாசம் நெற்பயிர்கள், தென்னை மரங்கள் சேதம்
ஒற்றை தந்தத்துடன் சுற்றும் காட்டு யானையால் நெற்பயிர்கள், தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளது
தென்காசி:
தென்காசி அருகே ஒற்றை தந்தத்துடன் சுற்றும் காட்டு யானையால் நெற்பயிர்கள், தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
யானை அட்டகாசம்
தென்காசி மாவட்டம் சில்லரைபுரவு பஞ்சாயத்து பகுதிக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தையொட்டி 800-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் மா, தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதி என்பதால் வனவிலங்குகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சில்லரைபுரவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட திரவியம் நகர் பகுதியில் ஒற்றை தந்தமுடைய காட்டு யானை ஒன்று விவசாயப் பகுதிகளில் புகுந்து நெல், தென்னை, வாழை போன்றவைகளை நாசம் செய்துள்ளது.
நெற்பயிர்கள் சேதம்
இதுகுறித்து அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் குமார் மற்றும் விவசாயிகள் கூறுகையில், “இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். தற்போது நெல் அறுவடை செய்யும் நேரத்தில் காட்டு யானை நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. தென்னை, வாழை மரங்களை அடியோடு பிடுங்கி எறிந்து உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்திய நெற்பயிர்கள், தென்னை மரங்களை மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டு நிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசு வழங்க முன்வர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.