மூதாட்டி மர்மசாவு; பெண் தூக்குப்போட்டு தற்கொலை; பாட்டி இறந்த அதிர்ச்சியில் பேத்தி உயிரை மாய்த்தாரா?
பெங்களூருவில் மூதாட்டி மர்மமான முறையில் உயிர் இழந்தார். அவரது பேத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். பாட்டி இறந்த அதிர்ச்சியில் பேத்தி உயிரை மாய்த்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
பாட்டி வீட்டுக்கு வந்தார்
பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாருதிநகரில் வசித்து வந்தவர் ஜெயம்மா(வயது 70). இவரது மகள் மஞ்சுளா. இவருக்கு சேத்தன் என்ற மகனும், மமதா என்ற மகளும் இருந்தார்கள். மமதாவுக்கு திருமணமாகி விட்டது. அவர் தனது கணவருடன் கொட்டிகேபாளையாவில் வசித்து வந்தார். மஞ்சுளாவின் உறவினர் திருமணம் நேற்று முன்தினம் மண்டியாவில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் கலந்து கொள்ள மமதாவும் முடிவு செய்தார். இதற்காக கடந்த 23-ந் தேதி இரவு கொட்டிகேபாளையாவில் இருந்து மாருதிநகரில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு மமதா வந்திருந்தார். பின்னர் நேற்று காலையில் மஞ்சுளா, சேத்தன், மமதா ஆகிய 3 பேரும் மண்டியாவுக்கு புறப்பட்டு செல்ல இருந்தனர். அப்போது திடீரென்று மமதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் செல்லவில்லை.
தூக்கில் தொங்கினார்
இதனால் மஞ்சுளா தனது மகனுடன் மண்டியாவுக்கு புறப்பட்டு சென்றாா். அப்போது ஜெயம்மாவும், மமதாவும் மட்டும் வீட்டில் இருந்தார்கள். நேற்று முன்தினம் மதியம் மமதாவின் செல்போனுக்கு, அவரது சகோதரர் சேத்தன் பலமுறை தொடர்பு கொண்டும், எடுத்து பேசவில்லை. இதையடுத்து, மமதாவின் கணவருக்கு, சேத்தன் தகவல் தெரிவித்தார். அவரும் மமதாவுக்கு தொடர்பு கொண்டபோது, செல்போனை எடுத்து பேசவில்லை.
இதையடுத்து, கொட்டிகே பாளையாவில் இருந்து மாருதிநகருக்கு அவர் விரைந்து வந்தார். அப்போது வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்ற அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் ஒரு அறையில் முகத்தில் ரத்த காயத்துடன் ஜெயம்மா பிணமாக கிடந்தார். படுக்கை அறையில் தனது மனைவி மமதா தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதார். இதுபற்றி மமதாவின் கணவர் அக்கம் பக்கத்தினருக்கும், ஞானபாரதி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
சுவரில் ரத்தம்
போலீசார் விரைந்து வந்து பாட்டி, பேத்தியின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது ஜெயம்மாவின் முகத்திலும், வாயிலும் ரத்தம் வந்திருந்தது. வீட்டு சுவரிலும் ரத்த கரை இருந்தது. அதுபோல், மமதாவின் கையிலும் ரத்தம் இருந்தது. இதனால் ஜெயம்மா எப்படி செத்தார்? என்பது மர்மமாக உள்ளது.
மமதா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். அதே நேரத்தில் மமதாவின் குழந்தை 3 மாதங்களுக்கு முன்பு இறந்திருந்தது. இதன் காரணமாக அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
பாட்டி இறந்த அதிர்ச்சியில்...
அதே நேரத்தில் ஜெயம்மாவுக்கு வயதாகி விட்டதால், வீட்டுக்குள் தவறி விழுந்ததால் முகத்திலும், வாயிலும் காயம் அடைந்து ரத்து வந்து இறந்திருக்கலாம் என்றும், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மமதா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயம்மாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பு தான், அவரது சாவுக்கான சரியான காரணம் தெரியும் என போலீசாா் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.