பாலக்கோடு பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி கிலோ ரூ4க்கு விற்பதால் விவசாயிகள் கவலை
பாலக்கோடு பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ4க்கு விற்பதால் வசாயிகள் கவலை அடைந்தனர்.
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பாப்பாரப்பட்டி, பெல்ரம்பட்டி, சோமனஅள்ளி, பேகாரஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் அதிகரிப்பால் தற்போது மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை கடும் வீழ்ச்சி அடைந்து நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.4-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பாலக்கோடு பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது. விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் தக்காளியை வாங்க தயங்குகின்றனர். போதிய விலை இல்லாததால் விவசாயிகள் தக்காளியை சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். தமிழக அரசு சார்பில் தக்காளி விலை குறைவு காலங்களில் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தயாரித்து விற்க விற்பனை சந்தையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.