தமிழக மாணவர்கள் கடும் குளிரில் சிக்கி உணவு இல்லாமல் தவிப்பு

உக்ரைனில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால் தமிழக மாணவர்கள் கடும் குளிரில் சிக்கி உணவு இல்லாமல் தவிக்கின்றனர் என்று அங்கிருந்து சொந்த ஊரான ஓசூர் திரும்பிய மாணவி உருக்கமாக கூறினார்.;

Update: 2022-02-25 21:23 GMT
ஓசூர்:-
உக்ரைனில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால் தமிழக மாணவர்கள் கடும் குளிரில் சிக்கி உணவு இல்லாமல் தவிக்கின்றனர் என்று அங்கிருந்து சொந்த ஊரான ஓசூர் திரும்பிய மாணவி உருக்கமாக கூறினார்.
ஓசூர் மாணவி
ஓசூர் ராயக்கோட்டை சாலையில் நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் ஜான் எபினேசர் ராஜா (வயது 50). இவருடைய மனைவி வனிதா விடியா, இவர்களது மூத்த மகள் சாரா லிசா கேடியா (21). இவர் உக்ரைனில் கார்கிவ் என்ற இடத்தில் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு் ஆண்டு படித்து வருகிறார்.
உக்ரைன்- ரஷ்யா இடையே போர் பதற்றம் தொடங்கிய நிலையில் அச்சம் அடைந்த சாரா லிசா கேடியாவை அழைத்து வர அவருடைய பெற்றோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
சொந்த ஊர் வந்தார்
கடந்த 23-ந் தேதி போர் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்பாக உக்ரைனில் இருந்து சாரா லிசா கேடியா விமானம் மூலம் தமிழகம் திரும்பினார். சென்னையில் இருந்த அவர் நேற்று ஓசூர் வந்தார். அவரை பெற்றோர்கள் கட்டித்தழுவி ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர். அவரும் பெற்றோரை கண்ட மகிழ்ச்சியில் மனம் நெகிழ்ந்தார். உக்ரைன் நிலவரம் குறித்து மாணவி சாரா லிசா கேடியா கூறியதாவது:-
உக்ரைன்- ரஷ்யா இடையே போர் வராது என நானும், சக மாணவர்களும் நினைத்து இருந்தோம். ஆனால் என்னுடைய பெற்றோர் அச்சமடைந்து என்னை கண்டிப்பாக நாடு திரும்பும்படி கூறினர். நான் கடும் போராட்டத்துக்கு இடையில் விமான டிக்கெட் பெற்று ஒரு நாளைக்கு முன்பு தமிழகம் வந்தேன்.
கடும் குளிரில் தவிப்பு
என்னுடன் படிக்கும் மற்ற மாணவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அங்கு பாதுகாப்பு இல்லாமல் கடும் குளிரில் தவிக்கின்றனர். எனவே அங்கு தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மாணவி கூறினார்.

மேலும் செய்திகள்