தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து ஏற்படும் முன் சரி செய்யலாமே?
தர்மபுரி நகரில் பிடமனேரி ரோடு மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள பகுதியில் சாக்கடை கால்வாய் மீது பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை தினமும் ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த நடைபாதையில் சாக்கடையை தூர்வார வசதியாக ஆங்காங்கே இரும்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கதவு ஒரு இடத்தில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஏதாவது உயிர்ப்பலி ஏற்படக்கூடிய அபாயம் கூட உள்ளது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
-மாதவன், அப்பாவு நகர், தர்மபுரி..
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் நாடார் தெருவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இதன் அருகே செடி கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகின்றன. மேலும் மிகவும் பழமையான கிணறு ஒன்றும் சுற்றுச் சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் அருகில் வீடுகள் உள்ளதால் மக்கள் அச்சத்துடனே இருக்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிணற்றுக்கு சுற்றுச்சுவர் கட்டி, செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
-ஆனந்தகுமார், குமாரமங்கலம், நாமக்கல்.
பயன்பாடு இல்லாத குடிநீர் தொட்டி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா சிக்கமாரண்டஅள்ளி கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்க குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டி 2 ஆண்டுகளுக்கு முன் பழுதாகி பயன்படாமல் உள்ளது. இதனால் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணி, சிக்கமாரண்டஅள்ளி, தர்மபுரி.
நோய் பரவும் அபாயம்
தர்மபுரி மாவட்டம் அரூர் மஜித் தெருவிலிருந்து பாட்ஷாபேட்டை செல்லும் ரோடு பகுதியில் சிறு பாலம் உள்ளது. இந்த இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், அரூர், தர்மபுரி.
தெருவிளக்கு எரியவில்லை
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா ஆவணி பேரூர் கீழ் முகம் கிராமம் மல்லிப்பாளைம் வார்டில் தெருவிளக்கு சில மாதங்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு எரிய செய்ய வேண்டும்.
-ஹரிகிருஷ்ணன், ஆவணி பேரூர் கீழ் முகம், சேலம்.