கடம்பூர் மலைப்பகுதியில் 50 அடி ஆழ பள்ளத்தில் குதித்து போலீஸ்காரர் தற்கொலை; குடும்ப தகராறில் விபரீத முடிவு

குடும்ப தகராறு காரணமாக கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள 50 அடி ஆழ பள்ளத்தில் குதித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-02-25 21:17 GMT
டி.என்.பாளையம்
குடும்ப தகராறு காரணமாக கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள 50 அடி ஆழ பள்ளத்தில் குதித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போலீஸ்காரர்
அந்தியூர் நகலூரை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 41). இவர் பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு நித்தின்(7) ,  ஹரீஸ்(2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் வேலுச்சாமி கடந்த 2 நாட்களாக விடுமுறையில் இருந்தார்். ஆனால் விடுமுறை முடிந்து நேற்று அவர் பணிக்கு செல்லவில்லை. 
இந்தநிலையில் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் அருகே உள்ள மல்லியதுர்கம் கோன்பாறை என்ற இடத்தில் உள்ள எஸ் வடிவ மலைப்பாதையில் வேலுச்சாமியின் கார் நேற்று இரவு நீண்ட நேரமாக நின்று கொண்டு இருந்தது. இதைப்பார்த்த  அந்த வழியாக சென்ற சிலர் உடனே இதுபற்றி கடம்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
பள்ளத்தில் முனகல் சத்தம்
அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது கார் நிறுத்தப்பட்ட இடத்தில் வேலுச்சாமி இல்லை. அருகில் உள்ள பள்ளத்தில் இருந்து “அய்யோ, அம்மா” என்று முனகல் சத்தம் கேட்டது. இதனால் போலீசார் அங்கு எட்டிப்பார்த்தனர். அப்போது வேலுச்சாமி பள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளத்தில் இறங்கி உடனே வேலுச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேலுச்சாமி இறந்தார். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ’வேலுச்சாமிக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் மனமுடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளனார். பின்னர் மல்லியதுர்கம் கோன்பாறை என்ற இடத்தில் உள்ள எஸ் வடிவ மலைப்பாதைக்கு நேற்று இரவு காரில் சென்றுள்ளார்.  அங்கு காரை நிறுத்திவிட்டு் 50 அடி ஆழ பள்ளத்தில் குதித்தது தெரிய வந்தது.
மேலும் இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்