உரிய ஆவணம் இன்றி லாரிகளில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்றால் பறிமுதல் செய்யப்படும்
உரிய ஆவணம் இன்றி லாரிகளில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்றால் பறிமுதல் செய்யப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர்;
உரிய ஆவணம் இன்றி லாரிகளில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்றால் பறிமுதல் செய்யப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்தார்.
வியாபாரிகள் அதிருப்தி
வெளிமாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வியாபாரிகள் நெல்லை வாங்கி, டெல்டா மாவட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக அவ்வப்போது புகார்கள் எழுந்தன.
இதை தடுக்க போலீசார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினர் வாகன தணிக்கை செய்யும்போது, அரிசி ஆலைகளுக்கு அரவைக்காக கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகளும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகள் நடைபெறுவதாக வியாபாரிகள் மத்தியில் அதிருப்தி எழுந்தது.
சோதனை
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் பெயரில் சட்டவிரோதமாக நெல் விற்பனை செய்வதை தடுக்க தற்போது ‘டிரான்சீட்’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு படிவம் தயாரிக்கப்பட்டு, அந்த படிவங்கள் டிரைவர்களிடமும், வியாபாரிகளிடமும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் உரிய ஆவணங்களுடன் நெல் மூட்டைகள் வெளிமாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு கொண்டு வரப்படுகிறதா? என குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று தஞ்சை மாவட்ட எல்லை பகுதியான புதுக்குடி, அற்புதாபுரம், மேலவஸ்தாசாவடி ஆகிய பகுதிகளில் திடீரென சோதனை மேற்கொண்டார்.
டிரைவர்களிடம் விசாரணை
அப்போது அவர், வெளிமாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கும், தஞ்சையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளுடன் சென்ற லாரிகளை வழிமறித்து அந்த நெல் மூட்டைகள் எங்கிருந்து எடுத்து வரப்படுகிறது எந்த பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது? என டிரைவர்களிடம் விசாரணை செய்தார்.
மேலும் நெல் மூட்டைகள் ஏற்றப்படும், இறக்கப்படும் இடங்கள், கொள்முதல் நிலையங்களாக இருந்தால் விவசாயிகளின் சாகுபடி விவரங்கள், லாரிகளின் முழு விவரங்கள் அடங்கிய படிவங்கள் இருக்கிறதா? என சரிபார்த்தார். மேலும் லாரிகளில் எடுத்து செல்லப்படுவது நெல் மூட்டைகள் தானா? என்பதையும் சோதனையிட்டார்.
பேட்டி
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது
கடந்த ஆண்டு வெளிமாவட்டங்களில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு அதிக அளவில் நெல் விற்பனைக்கும், அரவைக்கும் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்து வந்ததால் பறிமுதல் செய்தோம். இதனால் வியாபாரிகள் கோர்ட்டை நாடினர். இதனால் தமிழக அரசின் உத்தரவுப்படி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த படிவத்தில் நெல்லை விற்பனை செய்த விவசாயிகள் பெயர், வியாபாரிகள் பெயர், அரிசி ஆலை உரிமையாளர்கள் பெயர், எந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பூர்த்தி செய்து டிரைவர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த படிவங்களுடன் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நெல் மூட்டைகளை கொண்டு செல்லலாம்.
பறிமுதல்
படிவங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்தர்வக்கோட்டையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த 2 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது டிரைவர்களிடம் உரிய படிவம் இல்லாததால் வாகனங்களும், 3 டன் நெல்லும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
சோதனையின்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சனம், இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய், மணிகண்டன், நுகர்பொருள் வாணிபக்கழக மேலாளர்(தரக்கட்டுப்பாடு) வனிதா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜகுமார், போலீஸ் ஏட்டுகள் செல்வராஜ், வெற்றிவேல், நிகிலா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதேபோன்று டெல்டா மாவட்டங்கள் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.