சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு சர்வே கற்கள் நடும் பணி
சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு ஈரோடு மண்டல இணை ஆணையர் முன்னிலையில் சர்வே கற்கள் நடும் பணி நடைபெற்றது.
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு ஈரோடு மண்டல இணை ஆணையர் முன்னிலையில் சர்வே கற்கள் நடும் பணி நடைபெற்றது.
53 ஏக்கர் நிலம்
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு சர்வே கற்கள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் சுமார் 53 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்கள் அளவீடு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. அந்த பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்தது.
சர்வே கற்கள் நடும் பணி
இதைத்தொடர்ந்து அளவீடு செய்யப்பட்ட சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் நேற்று சர்வே கற்கள் நடும் பணி நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறையின் ஈரோடு மண்டல இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி கலந்து கொண்டு ஈரோடு மண்டலத்தில் முதலாவதாக சென்னிமலை அருகே அட்டவணை பிடாரியூர் கிராமத்தில் உள்ள 10.99 ஏக்கர் நிலத்தில் சர்வே கற்கள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறையின் ஈரோடு உதவி ஆணையர் மு.அன்னக்கொடி, கோவில் செயல் அலுவலர் மு.ரமணிகாந்தன், உதவி கோட்ட பொறியாளர் கே.காணீஸ்வரி, உதவி பொறியாளர் மு.சரவணன், தனி வட்டாட்சியர் (கோவில் நிலங்கள்) என்.தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் (கோவில் நிலங்கள்) அழகுராஜன் மற்றும் அரசு உரிமம் பெற்ற நில அளவையர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.