ஆவின் பால் வேனை திருடிய கோவை வாலிபர் சிக்கினார்
மதுரையில் ஆவின் பால் வேனை திருடிய கோவை வாலிபர் சிக்கினார்.
மதுரை,
மதுரை கே.கே.நகர் சுப்பையா காலனியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 39). இவர் ஆவின் பால் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆவின் பால் வேனை அண்ணாநகர் பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள கடைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி இருந்த பால் வேனை காணவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த முனிராஜ் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து ஆவின் பால் வேனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மதுரை நகரில் உள்ள அனைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே திருடப்பட்ட ஆவின் பால் வேன் தெற்குவாசல் பகுதியில் செல்வதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று அந்த வேனை விரட்டி சென்றனர். அப்போது வேன் வேகமாக சென்றதில் தெற்குவாசல் பகுதியில் விபத்தாகி நின்றது. பின்னால் விரட்டி சென்ற போலீசார் வேனை சுற்றி வளைத்து அதில் இருந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் கண்ணன் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, வேனை கைப்பற்றினார்கள்.