கோவிலை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கோவிலை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விக்கிரமங்கலம்:
பழமைவாய்ந்த கோவில்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காசான்கோட்டை கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கோவிலின் முகப்பு பகுதி பல நாட்களாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்கக்கோரி இந்து சமய அறநிலைத்துறைக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை சீரமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் இக்கோவிலை சீரமைக்க தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், பொதுமக்களாகிய தாங்களே அந்த கோவிலை கட்டிக்கொள்கிறோம் எனவும் அதிகாரிகளிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதற்கும் அதிகாரி எவ்வித பதிலும் வழங்காத காரணத்தால் நேற்று மாலை அந்த ஊருக்கு வந்த டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு காசாங்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வியிடம் கோவில் சீரமைப்பு சம்பந்தமான மனுவை பொதுமக்கள் கொடுத்துவிட்டு, அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.