நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை
நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.;
வேப்பந்தட்டை:
முற்றுகை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியில் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சேலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரது நெல் மூட்டைகள் லாரியில் கொண்டு வந்து இறக்கப்படுவதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு வந்து நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் விவசாயிகளின் நெல் மூட்டைகளை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகளின் நெல் மூட்டைகளை வாங்கக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
முறையாக நெல் கொள்முதல்
இதையடுத்து அங்கிருந்தவர்கள் விவசாயிகளிடம், முறையாக நெல் கொள்முதல் செய்யப்படும் என்று கூறியதை தொடர்ந்து அங்கிருந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.